சனி, 29 டிசம்பர், 2012

ஒரு பொய்.. தமிழ் சிறுகதை

இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே பயணிகளின் கனிவான கவனத்திற்கு, சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 540 தற்போது புறப்பட தயாராக உள்ளது. இவ்விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் வாயில் எண் 7 வழியாக விமானம் நோக்கி செல்லவும். 

"ப்ரியா செல்லம், நம்ம flight வந்தாச்சு... வா போகலாம்".... தனது 8 வயது மகளை அழைத்தான் கார்த்திக்.
"அப்பா, வாயில்ன்னா என்னப்பா?"... அப்பாவியாய் கேட்ட மகளிடம்... "வாசல் டா கண்ணா"... என்று கூறி புறப்பட்டான்.

விமான பணிப்பெண்ணுக்கு வணக்கம் சொல்லிவிட்டு தனது முன்னால் செல்பவர் வழிவிடும் வரை நின்று பின் தனது இருக்காய் நோக்கி சென்றான். 12 A, B இருக்கையில் அமர்ந்ததும், "ப்ரியா, belt மாட்டிக்கோடா" என்று அவளுக்கு பெல்டை மாட்டிவிட்டான்.

"எப்பபாத்தாலும் ஜன்னல் சீட்ல நீயே உக்கார்ரப்பா.. திரும்ப வரும்போது நான் உக்காருவேன்"... சண்டையிட்ட ப்ரியாவிடம் "சரி டா".. என்று சொல்லி தனது புத்தகத்தை திறந்து படிக்கலானான். 

"கார்த்திக்!"... ப்ரியாவின் குரல் கேட்டு நிமிர்தவனுக்கு அதிர்ச்சி.... நினைத்துக்கூட பார்க்கவில்லை மீண்டும் ப்ரியாவை சந்திப்பான் என்று.... 4 ஆண்டுகள் பின் இன்று விமானத்தில் அவன் இருக்கைக்கு அருகில். 

"அப்பா உனக்கு இந்த ஆண்டியை தெரியுமா?"... ப்ரியா கேட்டாள்.... தெரியும் என தலையசைத்துவிட்டு.... அவளை நோக்கி.... "எப்படி இருக்கீங்க ப்ரியா?" என்று மட்டும் கேட்டுவிட்டு, தனது மகளை நோக்கி... "இவங்க பேர்தான் ப்ரியா.. அப்பா உனக்கு கதை சொல்லுவேன் இல்லயா... அந்த ஆண்ட்டி இவங்கதான்".... என்று அவள் காதில் மெல்லியதாய் கூறினான்.

அவள் இருக்கையில் அமர்ந்த பின்னும் நெகிழ்ச்சியில் இருவராலும் எதவும் பேசிக்கொள்ள இயலாததை உணரந்தவளாய் அந்த சிறுமி, ப்ரியாவை நோக்கி... "ஆண்ட்டி, என் பேர் கூட ப்ரியா தான், அப்புறம் எங்க அப்பா என்கிட்ட பொய் செல்லவே மாட்டார்"... அவ்வளவு ஸ்மார்டா பேசுகின்ற தன் பெண்ணை பார்த்து ஆச்சர்யத்தில் திளைத்தும் வெளிகொணராமல் புன்னகை உதிர்த்து தனது மகளின் தலை கோதினான்.

சில நிமிட மௌனத்தின் பின், அவளே மௌனத்தை உடைத்தாள்.

"நான் என்ன அவ்ளோ நல்லவளா கார்த்திக்?"... நெகிழ்ச்சியில் அவள் கேட்க்க, இவன் பதில் கூறும் முன், அவனது மகள் முந்திக்கொண்டு "ஆண்ட்டி இந்த dialog விண்ணைத்தாண்டி வருவாயா படத்துலையே கேட்டாங்க.. நீங்க ஒரு changeக்கு, நீங்க என்ன அவ்ளோ நல்லவரா கார்திக்ன்னு கேட்டிருக்கலாமே?"... என்று கூறி சிரித்தாள்.

"நீ ரொம்ப ஸ்மார்ட்டா பேசரடி".. என்று சிறுமியின் தலை தழுவி.... "உங்கம்மா வரலையா?" என்று கேட்டாள்... சிறுமி நிமிர்ந்து கார்த்திக்கை பார்க்க..."அவங்க already போய்ட்டாங்க.. திரும்பி வரும்போது ஒண்ணா வருவோம்".. என்றான்.

"நான் அவங்களை பார்க்கணுமே கார்த்திக்?".... கேட்டவளிடம் "கண்டிப்பா, ஒரு நாள் வீட்டுக்கு வாங்க"... என்று கூறினான்.

"அப்பா நான் bathroom போயிட்டு வர்றேன்"...என்று சொல்லி ப்ரியா அங்கிருந்து அகன்றாள்

"எப்போ adopt பண்ணீங்க கார்த்திக்?"....
"Processing 2 வருஷம் ஆச்சு, இப்போ எங்களோட வந்து 1.5 வருஷம் ஆச்சு"...

மீண்டும் மௌனம் நிலவ.... "நீங்க சந்தோஷமா இருக்கறத பார்க்க சந்தோஷமா இருக்கு"... மனதுக்குள் கூரியவளாய்... நீங்க ப்ரியாகிட்ட ஏன் பொய் சொல்றதில்லன்னு கேட்டாள்... 

அதெப்படி பெண்கள் மட்டும் தங்கள் எல்லா கேள்விக்கும் விடை தேடுகிறார்கள்?... அதுமட்டுமல்லாது எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேட்டு விடுகிறார்கள்... என்று நினைத்துக்கொண்டே சிறிதாய் ஒரு புன்னகை மட்டும் உதிர்த்து மௌனத்தை பதிலாய் தந்தான்.... சில விஷயங்களை சொல்லி புரியவைப்பதை விட சொல்லாமல் புரியவைக்க கற்றுகொடுத்த குருவே அவள்தான்!.... புரிந்து கொண்டவளாய் மேலும் தொடராமல் "ப்ரியான்னு பேர் வச்சிட்டாலே ஸ்மார்ட் ஆயிடறாங்கல்ல"... என்று கூறி புன்னகைத்தாள்....

டெல்லி விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்ததும், "கண்டிப்பா ஒரு நாள் உங்க வீட்டுக்கு வர்றேன் கார்த்திக்" "take care டா குட்டி "... என்று சின்ன பெண்ணிடம் கூறிவிட்டு விடைபெற்றாள்.

அவள் சென்றதும் கார்த்திக்கிடம் சிறுமி "அப்பா இதுவரைக்கும் நீங்க ப்ரியாகிட்ட சொன்ன உண்மைகளை விட இன்னிக்கு நீங்க அம்மா இருக்காங்கன்னு சொன்ன பொய் ரொம்ப ரொம்ப உயர்ந்ததுப்பா".... என்று சொல்ல.... அவளை அணைத்து முத்தமிட்டான்.

"அவங்க வீட்டுக்கு வந்தா என்னப்பா பண்றது?".. என்று அறியாமல் கேட்ட சிறுமியிடம்... "அவங்க வரமாட்டாங்க டா".... என்று சொல்லி நடக்கலானான்.

பல கதைகளின் இனிமையை உணர்வதற்கு அதன் கசப்பான முடிவுகளே காரணம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக